 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Wed Apr 08, 2009 6:10 am Post subject: A Handful of Piano Picks(24) - Expressions |
|
|
A Handful of Piano Picks - Part 24
வாத்தியங்கள் என்பது மெல்லிசை மன்னரின் இசையில் மிகச் சிறப்பானதாக இருந்திருக்கிறது; அதே சமயம், வாத்தியங்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் இசைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்த பெருமை மெல்லிசை மன்னரின் தனிச்சிறப்பு.
'சிவந்த மண்' படத்தின் பின்னணி இசையில் நூற்றுக்கணக்கான வாத்தியங்களுடன் ஆர்கஸ்ட்ரேஷனில் விளையாடிய அவர், 'நிழல் நிஜமாகிறது' படத்தில் சந்தூர்-தபேலா மட்டும் கொண்டும் அசத்தியிருப்பார். 'இந்துஸ்தானி என்றால் சந்தூர் உபயோகிக்காமல் வேற 'எந்தூர்' வாத்தியத்தை வாசிக்க முடியும்?' என்று வினவுபவர்களுக்கு மெல்லிசை மன்னரின் இசையே பதிலாக வருகிறது. 'கவிதையில் எழுதிய காவியத் தலைவி', பாடலில் (திரையில் காணாத version) இந்துஸ்தானி-ஆர்கெஸ்ட்ரேஷனில் கிளப்பியிருப்பார்.
அதே போல் 'பியனோ' என்றால் மேற்கத்திய சாயலில்வரும் பாடலுக்கு மட்டுமே என்று அவர் இருந்ததே இல்லை. 'கண்ணென்ன கண்ணென்ன கலங்குது' கிராமிய இசை. 'மனிதனென்பவன் தெய்வமாகலாம்' ரம்மிய இசை. 'மலரென்ற முகமது சிரிக்கட்டும்' ராக்-அன் ரோல் இசை. 'வரவேண்டும் ஒரு பொழுது' ஜாஸ் விந்தை. 'என்னைத் தெரியுமா' ஒரு க்ளப் பாடல் என்று நினத்தால், சரணத்தில் தபேலா வந்து மெருகேற்றுகிறது.
ஆக எந்த ஒரு வட்டத்துக்குள்ளும், எந்த ஒரு வரையரை கொண்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் இசையை அடைமழையாய்ப் பொழிந்த மெல்லிசை மன்னருக்கு 'விண்ணிசை வேந்தர்' என்ற பட்டமும் மிகச் சிறிதாகத் தோன்றுகிறது!!
"Feminine Expression"ஐ இசையில் வெளிப்படுத்துவதில் மெல்லிசை மன்னர் ஒரு வித்தகர். பியானோவில் அமைந்த, 'உயர்ந்த மனிதன்' படத்தின் 'அத்தானின் முத்தங்கள்' இதற்கு சிறந்த உதாரணம். பியானோ ப்ரயோகத்திற்கு இன்னொறு கோணம்!
முன்னிசை மெதுவாக பியானோவில் துவங்க, சுசீலா அவர்கள் பல்லவியை மெதுவாக ரசித்து ஒரு முறை பாட, அவ்வரிகளே பாடலாகத் தொடரும்.
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்
இரண்டாம் வரி மறுமுறை வரும் போது என்ன சுகம்! என்ன அருமையான variation!! மெல்லிசை மன்னருக்கே உடைய முத்திரை!
பியானோ அடங்காமல் இடையிசையில் அசத்தி முடிக்க சரணம் துவக்கம்.
துயில்வது போல் ஒரு பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ
சரணத்திலும் முதல் முறை கவிதையாகப் படித்து விட்டு மறுமுறை பாடலாக வரும். இரண்டாம் முறை வருகையில் ஒரு துள்ளல் இருப்பது மிக அழகு.
பாடல் முழுவதிலும் வரிகள் இருமுறை பாடப் படுகின்றன. இரண்டாமுறை வருவதைக் கவனித்துப் பார்த்தால் அது நாயகி தனக்குள்ளேயே மறுமுறை கூறி ரசித்துக்கோள்வது போலிருக்கும்.
Enjoying a Retrospect!
எங்கெங்கே தொட்டாலும் தித்திக்கும் எண்ணங்கள்
இவ்வரி துவங்கும் போது அழகாக தபேலா துவங்கும். இன்னொறு முத்திரை!
அங்கங்கே சொர்கத்தைச் சந்திக்கும் உள்ளங்கள்
கேட்பவர்கள் உள்ளங்கள் சொர்கத்தைச் சந்திக்க அருமையான variation அமைத்திருப்பார் இவ்வரியில்.
"அத்தா....னின்" எனும் போதே எவ்வளவு அழகாக இருக்கிறது. ஒவ்வொறு வார்த்தையாகப் பார்த்தாலும், வரியாகப் பார்த்தாலும், ஒரு முழு பாடலாகப் பார்த்தாலும் உணர்வுகள் வெளிப்பட்ட விதத்தில் வேறுபாடேயில்லை. ரசாயனத்தில் ஒவ்வொரு அணுவிற்கும் அதே குணங்கள் இருப்பதைப் போன்று, பாடலின் ஒவ்வொறு சொல்லும் மெல்லிசைச் சிறப்பைச் சொல்லும்!
"பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பாரதி தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக் கொண்டார். இப்பாடலின் மூலம் மெல்லிசை மன்னர் தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக் கொண்டுள்ளார்!
தான் இசை அமைக்கும் திரைப்படங்களில் மிக சிக்கலான கதைச் சூழல்கள், பலதரப்பட்ட உணர்வுகளை ஒரு சேர உணர்த வேண்டும் இடங்கள் (Complex Emotions, Mixed Feelings) போன்றவை மெல்லிசை மன்னருக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கின்றன. இதற்கு "தேரேது...திருநாளேது; தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது", "காண வந்த காட்சியென்ன" போன்ற பாடல்கள் நல்ல உதாரணங்கள்.
அதே வகையில் "புதிய பறவை" படத்தின் இறுதிக் கட்டங்களில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடல் இன்னொரு அருமையான எடுத்துக்காட்டு.
இப்பாடல் ஒரு ஆணின் (கதா நாயகனின்) உணர்வுகளை உணர்த்துவதாக உள்ளது. ஆனால் இப்பாடலின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், கதா நாயகி பாடலைப் பாடி பழைய ஞாபகங்களைத் தூண்ட, நாயகன் உணர்ச்சிப் பெருக்கில் பியனோவில் அப்பாடலை நினைவு கூறிக்கொண்டிருப்பார். நினைத்துப் பார்த்தால் இசையமைக்க மிகக் கடினமான சூழல். ஆனால் அந்த காரணத்தாலேயே மெல்லிசை மன்னருக்கு இப்பாடல் மிக எளிமையானதாகவும், இனிமையானதாகவும் அமைந்திருக்கின்றது.
ஸ்பானிஷ் வகையில் பியானோ முன்னிசை. கொஞ்சம் உணர்ச்சிவசமாக இடையிசை. இடையிசையில் தான் என்ன அருமையான வயலின் லேயரிங்க், அப்போது "Lower Octaves" இல் பியானோ - கதையையும் காட்சியையும் விளக்க சிறந்த இசை வெளிப்பாடு!
ஆக எப்பேற்பட்ட சூழலும் இவருக்கு சவலாக இல்லாமல் திருநெல்வேலி அல்வாவாக இருந்திருக்கிறது. சுவைத்தது அவர் மட்டுமில்லை, இன்னும் நூற்றாண்டுகள் தாண்டி பாடலை ரசிக்கப்போகும் ரசிகர்களும் தான்.
பியானோவைப் பாடல் முழுவதிலும் இல்லாமல் ஒரு சில இடங்களில் இவர் செலுத்திய போதும் அவ்வளவு அழகாக இருக்கிறது.
"ஒடிவது போல் இடை இருக்கும்" என்ற ஒரு அற்புதமான பாடல் இதற்குச் சான்று. பியானோ முன்னிசையில் மட்டும் தான் வரும். ஆனால் பாடல் முழுவதற்குமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இப்பாடலில் தான் என்ன ஆர்கஸ்ட்ரேஷன். "Royal Philharmonic Orchestra" இப்பாடலைக் கேட்டால் இவருக்குச் சிகப்புக் கம்வள வரவேற்பளிக்கும்!
"அன்று வந்ததும் இதே நிலா" எனும் இன்னொரு அட்டகாசமான பாடலின் முதல் இடையிசையில் வரும் பியானோ உள்ளத்தைப் பாடலுக்குள் ஈர்த்துவிடும் சிறப்பு வாய்ந்தது. இடையிசையில் சிறிய நேரம் வந்தாலும் அதன் 'Touch' தனி சுகம். அதே போல் "அவளுக்கென்ன அழகிய முகம்" பாடலிலும் ஒரு இடையிசையில் மட்டும் பியானோ வரும். குழல் பின் தொடர, இப்பாடலுக்கு அந்த பியானோ ஃபில்லிங்க் மிகப் பொருத்தமாய் இருக்கும். "சொர்க்கம் பக்கத்தில்" பாடலில் சரணங்களில் "கொஞ்சம் வா, கொஞ்ச வா" இடங்களில் மெல்லியதாக பின்னணியில் வந்தாலும் துள்ளல் கொஞ்சமும் குன்றாமல் இருக்கும். (இப்பாடல்கள் அனைத்தும் முழு நீள பியானோ பாடல்கள் இல்லை என்கிற ஒரே காரனத்தினால், விட மனமின்றி விடுகிறேன். ஆனால் ஒவ்வொரு பாடலைப்பற்றியும் நாம் பக்கம் பக்கமாக எழுத முடியும் என்பதையும் இங்கு கூறியாக வேண்டும்.)
ஒரு கலையின், கலாசாரத்தின் சிறப்பு என்பது அது எவ்வளவு ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டது என்பதை வைத்தே அமையும். இந்திய/உலக இசையில் நம் கர்னாடக இசையின் சிறப்பு, ஆழம், ஆளுமை - இதற்கு நிகர் வேறொன்றும் இல்லை என்பது உண்மையே. இதற்குக் காரணம் மேற்கூறியதைப் போல் அதனுள் இருக்கும் ஆழ்ந்த சிந்தனைகள் தாம். (Absolute Perceptions)
இதை உணர்த்த தியாகராஜ சுவாமிகள் அமைத்த ஒரு கீர்த்தனையைப் பார்ப்போம். சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த "நாத தனுமனிஷம் ஷங்கரம்" என்கிற க்ரிதி. அதாவது "பரிசுத்தமான நாதத்தைத் தன் உருவாகக் கொண்டவன் ஷங்கரன்!" என்பது பொருள். "தூய இசையே இறைவனின் வடிவு" என்கிற போது "இறையும் இசையும் ஒன்று" என்கிற ஆழ்கருத்து இதில் அடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட வலிமைமிக்க பொருளடக்கம் கொண்டவையாக இருப்பதால்தான், இசையிலும் இறையிலும் இந்தியா ஓங்கி நிற்கிறது.
மெல்லிசை மன்னரின் கருத்துகளை நாம் கேட்டிருக்கிறோம். "எப்படி நீங்கள் பாடல்களுக்கு இசை அமைக்கின்றீர்கள்?" என்று கேட்டால், அவர் "நான் எங்கு பாடலுக்கு மெட்டமைக்கிறேன்?! பாட்டினில் இருக்கும் மெட்டினை அடியேன் கண்டு பிடிக்கிறேன், அவ்வளவுதான்!" என்பார். அதே போல் பின்னணி இசையைப் பற்றிக் கூறும் போது "ரீ-ரெக்கார்டிங் என்பது திரைக்கு பின்னால் இருந்து இயங்க வேண்டியது. அது திரைக்கு முன்னால் வந்து நின்றால் அது ரீ-ரெக்கார்டிங் இல்லை" என்பார்.
ஆக மெல்லிசை மன்னர் இசையை ஒரு வேறு ஏதோ ஒரு 'பொருளாகப்' பார்க்கவில்லை. ஒரு படைப்பினுள் ஏற்கனவே நிறைந்து கிடக்கும் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் எனும் போது மெல்லிசை மன்னர் மற்றவர்களிடமிருந்து இசையை நோக்கும் கோணத்திலிருந்தே வேறுபடுகிறார் என்பது புலப்படுகிறது. (A Perspective Level Difference). படைப்பு, படைப்பின் தரம் ஆகியவை இரண்டாம் குணங்களாக இருக்க, முதல் படியான "Perception"னிலேயே உயர்ந்து விடுகிறார் மெல்லிசை மன்னர்.
கீர்த்தனையின் பல்லவியில் கூறப்பட்டுள்ள கருத்தும், மெல்லிசை மன்னரின் கருத்தும் - வெவ்வேறு காலகட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், வெவ்வேறு விதமாக கூறப்பட்டிருந்தாலும் உள்ளடக்கிய கருத்தில், பொருளில் ஒன்று பட்டு நிற்பதாக நான் உணர்கிறேன். இரண்டுமே இசை என்பது 'நீக்கமற நிறைந்திருப்பது' (Music's Omnipresence) என்கிற கருத்தை வலியுறுத்துகின்றன.
கீர்த்தனையின் சரணத்தில் வரும் வரி இது:
"சத்யோஜாதாதி பஞ்ச வக்த்ரஜ
சரிகமபதனி வர சப்தஸ்வர"
அதாவது சத்யோஜாதம் துவங்கி வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் போன்ற பஞ்ச முகங்கள் கொண்ட ஷங்கரனிடமிருந்து சப்தஸ்வரங்கள் உருவானது" என்று பொருள். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், "எப்படி ஐந்து முகங்களிலிருந்து ஏழு ஸ்வரங்கள் உருவாகமுடியும்?" என்ற ஐயம் நமக்கு எழும். அதற்கான பதில் உண்மையில் அறிவொளி ஏற்றுவதைப் போல் இருக்கிறது. "சப்த ஸ்வரங்களில் "ச" வும் "ப" வும் இயற்கையோடு இருக்கும் ப்ரக்ருதி ஸ்வரங்கள்; ஆதி ஸ்வரங்கள்; மீதி இருக்கும் ஐந்து ஸ்வரங்கள் தான் ஷங்கரனிடம் இருந்து வந்தது!" என்கிற சூக்ஷ்மத்தை உள்ளடக்கி இருக்கிறார் ஸ்வாமிகள். இதை வெறும் கதையாகவும் புராணமாகவும் பார்க்காமல் சொல்ல வந்த கருத்தின் தெளிவைப் பார்க்கும் போதும், இந்திய இசையின் பாரம்பரியத்தைப் பார்க்கும் போதும் பெரும் வியப்புடன் சிலிர்ப்பும் ஏற்படுகின்றது.
மெல்லிசை மன்னரின் பாடல்கள் என்றென்றும் ஜீவனுடன் அழிவில்லாமல் மின்னிக் கொண்டிருப்பதற்குக் காரணம் வெறும் எண்ணிக்கையாலும், பெற்ற வெற்றிகளாலும் இல்லை. எழுச்சியும், மலர்ச்சியும், அறிவில் ஒளியையும் ஏற்றுவதோடு மட்டுமில்லாமல் இயற்கையாய் இனிமை கொண்டு, இசையில் ஆதி ஸ்வரமாகவும் இருப்பதனால்!
இச்சிறப்புகள் கொண்ட மெல்லிசை மன்னரையும் அவரது இசையையும் எவ்வாறு வணங்குவது? தியாகராஜ ஸ்வாமிகளின் வரி கொண்டு வணங்குவதே முறை என்று எனக்குப் படுகிறது:
"நமாமி மே, மனஸா ஷிரஸா!"
(தொடரும்)
A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|